நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

கம்பம்: கம்பத்தில் சாலையோரங்களில் கடை நடத்துபவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவுமாறு நகராட்சி கமிஷனரிடம் மனு

அளித்தனர்.

கம்பம் நகராட்சியில் ஆங்காங்கே ரோட்டோரங்களில் காய்கறி, பழங்கள், தேங்காய், பலசரக்கு கடைகள் நடத்தி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளை, கடைகளை அகற்றிக் கொள்ள கடந்த வாரம் உத்தரவிட்டது.

வாரச்சந்தைக்கு உள்புறம் கடைகள் வைத்துக் கொள்ள கூறப்பட்டது. இதனால் சாலையோர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காந்திஜி வீதி, பார்க் ரோடு, உழவர் சந்தை வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வீதி, வேலப்பர் கோயில் வீதி உள்ளிட்ட வீதிகளில் நூற்றுக்கணக்கான கடைக்காரர்கள்உள்ளனர்.

நேற்று காலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி கமிஷனர் உமா சங்கரிடம் மனு அளித்தனர்.

அதில், அன்றாடம் வாழ்க்கை பிழைப்புக்காக கடைகள் நடத்தி வருகிறோம்.

கடைகளை காலி செய்ய வலியுறுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவற்றிற்கு இதுவே கை கொடுத்து வருகிறது.

கடைகளை காலி செய்தால் எங்களுக்கு வேறு தொழில் இல்லை. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Advertisement