கோவை கனிம வள கொள்ளை விவகாரத்தில் பெயரளவுக்கு 19 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்: அரசு அதிகாரிகள், போலீசாரின் பங்கு அப்பட்டம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852765.jpg?width=1000&height=625)
கோவை : கோவை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை நடந்த விவகாரத்தில், ஐகோர்ட்டுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, கோவை வடக்கு மற்றும் பேரூர் தாலுகாக்களில் பணியாற்றிய, 19 வி.ஏ.ஓ.,க்கள், பெயரளவுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு, இட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் மற்றும் நீரோடைகளில் இருந்து லோடு லோடாக கனிம வளம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
தடுக்காமல் இவ்விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கடுமையாக சாடிய ஐகோர்ட், கனிம வளம் கடத்தல் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு நியமித்து, மீண்டும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்கியது. அக்குழு, தனது முதல்கட்ட விசாரணையை துவக்கியிருக்கிறது. அதனால், கனிம வள கொள்ளையில் தொடர்பு உடையவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
ஏனெனில், 'கனிம வளம் கடத்தப்பட்டுள்ள இடங்களை சேர்ந்த தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.
நியாயமான விசாரணையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் தாலுகாக்களில் இருந்து அவர்களை மாற்ற வேண்டும். தேவைப்பட்டால், வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும்' என உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உத்தரவை கிடப்பில் போட்டது. போலீஸ் தரப்பிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சூழலில், கலெக்டர் கிராந்திகுமார், சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் விழித்திருக்கிறது.
ஐகோர்ட்டுக்கு கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக, பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாக்களை சேர்ந்த, 19 கிராம நிர்வாக அதிகாரிகளை (வி.ஏ.ஓ.,), பெயரளவுக்கு வெவ்வேறு கிராமங்களுக்கு மாறுதல் செய்துள்ளது.
தெற்கு கோட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட பேரூர் தாலுகாவை சேர்ந்த, 14 வி.ஏ.ஓ.,க்களை, மதுக்கரை தாலுகாவுக்கு மாற்றியுள்ளனர்.
வடக்கு கோட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட, வடக்கு தாலுகாவை சேர்ந்த ஐந்து வி.ஏ.ஓ.,க்களை மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு மாற்றியிருக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் ஒரே கோட்டத்தில் அருகாமையில் உள்ள தாலுகா மற்றும் கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதிலிருந்து, கனிம வள கொள்ளைக்கு அரசு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடந்தையாக இருந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஐகோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., மற்றும் தாசில்தார்களை, முதலில் 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முடிந்த பிறகே, பணியிடம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், கனிம வள கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் பட்டியலை ஐகோர்ட் பெற்று, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
![தமிழன் தமிழன்](https://img.dinamalar.com/data/uphoto/148035_042828623.jpg)
மேலும்
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'