வான் சாகச கண்காட்சியில் 'தற்கொலை' ட்ரோன் அறிமுகம்

பெங்களூரு : பெங்களூரில் நடைபெற்று வரும் வான் மற்றும் ராணுவ கண்காட்சியில், இந்திய - சீன எல்லை உள்ளிட்ட உயரமான பகுதிகளில் இயங்கும் வகையில், 'ஏ.எல்.எஸ்., - 250' என்ற தற்கொலை தாக்குதல் ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவன தயாரிப்பான இந்த ட்ரோனில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான நவீன அமைப்புகளும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


வெவ்வேறு கால நிலைகளிலும், மிகக் குறுகிய ஓடுபாதைகளிலும் எளிதாக இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலப்பரப்பு கொண்ட லடாக் உள்ளிட்ட இந்திய - சீன எல்லைகளை கண்காணித்து, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இதன் ரேஞ்ச், 250 கி.மீ., ஆக உள்ளது.


ராணுவ தேவைக்கு ஏற்ப, டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட இதர ஏவுகணைகளை பயன்படுத்தும் வகையில், இந்த ட்ரோனை உருமாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி; எந்தவித கால நிலைகளிலும், இலக்கை துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் இதற்கு உண்டு.


வெடிகுண்டுகள், வெடிமருந்து இடம்பெற்ற இந்த ட்ரோன், இலக்கை நெருங்கி, துல்லியமாக இலக்கை எட்டும் வரை வட்டமிட்டபடி நோட்டமிடும். பிறகு இலக்கை தாக்கியதும் வெடித்துச் சிதறிவிடும். எனவே, இதற்கு தற்கொலை ட்ரோன் எனப் பெயர்.

Advertisement