தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் காத்திருப்பு

திருப்புத்துார் தொகுதியில் சிங்கம்புணரி ரோட்டில் காரையூர் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.3கோடியில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கவும், அதில் 400 மீ ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம் அமைக்கவும், மேலும் தனித் தனியாக கபடி, கோ-கோ, கைப்பந்து,கூடைப்பந்து, பேட்மின்டன் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ஆண்,பெண்களுக்கான குளியலறை, கழிப்பறை வசதி, பார்வையாளர்கள் அமரும் வகையில் காலரி வசதியும் ஏற்படுத்த முடிவானது. ஓராண்டாகியும் திட்டப்பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.

வருவாய்த்துறையினர் கூறுகையில், விளையாட்டு அரங்கிற்கான இடம் தேர்வாகி விட்டது. காரையூர் ஊராட்சியில் சிங்கம்புணரி ரோட்டில் சோழம்பட்டி விலக்கு ரோட்டிற்கு எதிரில் 5.5 ஏக்கர் பரப்பளவில் இடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்திற்கு வகைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.' என்றனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினர் கூறுகையில், தற்போது காரைக்குடியில் நடைபெறும் ஸ்டேடியம் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் இடம் அனுமதியாகி விட்டது. வகைமாற்றத்திற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி அனுமதியாவதற்கான முன்னுரிமையில் உள்ளது. வரும் ஆண்டில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அனுமதியான பின்னரே திட்டமதிப்பீடு, அதிலுள்ள விளையாட்டு வசதிகளும் இறுதி செய்யப்படும்' என்றனர்.

திருப்புத்துார் ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தனிநபர், குழு விளையாட்டுக்கள், தட களம் பயிற்சிக்கான விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் விளையாட்டுத் திறன் மிக்கவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புத்துாரில் தனியார் இடங்களில் மாநில அளவிலான பால் பேட்மின்டன், வாலிபால், இரவில் மின்விளக்கில் கூடைப்பந்து, டென்னிஸ் போட்டிகள் அதிகமாக நடத்தப்பட்டன.

தற்போது விளையாட மைதான வசதி இல்லாததால் விளையாட்டுக்கள் குறைந்து விட்டன. மேலும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் போதுமான மைதான வசதியின்றி உள்ளது. இதனால் காரையூர் மினி ஸ்டேடியம் திட்டத்தை விரைவுபடுத்தவும், அதில் உள்ளரங்கு விளையாட்டு வசதி ஏற்படுத்தவும், பயிற்சியாளர் வசதி ஏற்படுத்தவும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Advertisement