மேய்ச்சல் நிலத்தில் நர்சரி பண்ணை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
மானாமதுரை : செய்களத்துார் அருகே உள்ள கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்கியதை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்களத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்க நிர்வாகிகள் இப்பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் என்பதால் இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நேற்று வனத்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவிரி வைகை குண்டாறு பாசன சங்க விவசாய சங்க நிர்வாகி ராமமுருகன் மற்றும் பலர் பணியை நிறுத்த வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அங்கும் விவசாயிகளுக்கும்,வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.