தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்ததால் பிரதமரின் மதிப்பு உயர்ந்துள்ளது: அண்ணாமலை

14

பழனி : ''தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்ததால் பிரதமர் மோடியின் மதிப்பு உயர்ந்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


பழனி கோவிலில் தரிசனம் செய்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக காலணி அணியாமல் வேள்வி துவங்கி 48 நாட்கள் நிறைவடைந்தன; தைப்பூச நாளில் ஒரு மண்டலம் முடிந்துள்ளது.

மதிப்பு உயர்ந்துள்ளது



எங்கள் குடும்பத்தின் காவடி எடுத்து வந்து பழநி முருகனை தரிசனம் செய்துள்ளேன். நாளை முதல் 48 நாட்கள் நிறைவடைந்த பின் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல உள்ளேன். இங்கு படிகளில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 15 கி.மீட்டருக்கு ஒரு கழிப்பறை வசதி அரசு அமைத்து தர வேண்டும்.


பிரதமர் மோடி பிரான்சில் இருந்து தைப்பூசத்திற்கு, 'கந்தனுக்கு அரோகரா' என உள் உணர்வோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் அவரின் மதிப்பு உயர்ந்துள்ளது.


விஜய், பிரசாந்த் கிஷோர் என யாரை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். 'ஏசி' அறையில் அரசியல் வல்லுனர்களின் கருத்துக்களுக்கு செயல்படுவதில்லை. 'என் மண் என் மக்கள்' யாத்திரை போல மக்களை சந்திக்க யாத்திரை செல்ல வேண்டும்.


முதல்வர் ஸ்டாலின், மக்களை நேரடியாக சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க.,வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்னை. 'தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை வேறு மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது' என முதல்வர் கூறியது பச்சை பொய்.


அரசியலில் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்களை சட்டப்படி பயன்படுத்தக் கூடாது. ஆனால் த.வெ.க.,வில் சிறார் அணி அமைத்துள்ளதாக கூறுவதில் யாரை நியமிப்பர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement