'படித்து நல்ல பதவிக்கு செல்வதை மாணவர்கள் லட்சியமாக கொள்ளுங்கள்'

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சென்னப்பன் வரவேற்றார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ், டி.இ.ஓ., ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்.குமார் பேசுகையில், ''காது கேட்காத ஒருவர், நாம் அன்றாடம் பயன்படுத்தும், 1,600க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்துள்ளார். அவர் தான், தாமஸ் ஆல்வா எடிசன். 30 முறை தோல்வியடைந்த ஆபிரகாம் லிங்கன், 31வது முறை வெற்றி பெற்றார். படிப்பது போல் சுலபமான வேலை வேறு எதுவும் இல்லை. கல்விதான் மிகவும் முக்கியம். எனவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். நாங்கள் படிக்கின்ற காலத்தில், புத்தகம் கிடைக்காமல் அலைந்தோம். அரசு உங்களுக்கு அனைத்து புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறது. படித்து நல்ல பதவிக்கு செல்ல வேண்டும் என, ஒவ்வொருவரும் லட்சியம் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பூங்கொடி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் உமாமகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி திட்ட அலுவலர் வடிவேல், வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement