காந்திகிராமம் வள்ளலார் ஞானசபையில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

கரூர்: கரூர், காந்திகிராமம் வள்ளலார் ஞான சபையில், 25ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் வள்ளலார். தன்னால் இயன்ற அளவு, பிறருக்கு அன்னதானத்தை வழங்கியவராகவும், இன்றளவும் அவருடைய பெயரை கூறி அன்னதானம் நடந்து வருகிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வள்ளலார் ஜீவசமாதி அடைந்து, ஜோதி ரூபமாக தரிசனம் தந்தது தைப்பூச நாளாகும்.

இதன்படி, கரூர் தெற்கு காந்திகிராமம் சக்தி நகரில் வள்ளலார் ஞானசபையில், தைப்பூச தினத்தை முன்னிட்டு, 25ம் ஆண்டு ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. காலை, 5:50 மணிக்கு வடலுாரான் சமரச சன்மார்க்க அறக்கட்டளை நிர்வாகி கணேசன் ஜோதி ஏற்றினார். 6:01 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. 8:15 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து மதியம், 1:00 மணி, இரவு, 7:00 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக காலை, 10:00 மணிக்கு தொழிலதிபர் சாமியப்பன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மருதநாயகம், ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமணன் ஆகியோர் வள்ளலாரின் மார்க்க
நெறிகள் குறித்து சொற்பொழிவாற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்.

Advertisement