பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்; முருகனை தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கரூர்: வெண்ணைமலை, பாலசுப்பிரமணிய கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து, முருகனை தரிசனம் செய்தனர்.

கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கட்டளைதாரர்களின் மண்டக படி பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த, 9ல் முருகன் உடனான வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை முதல், தைப்பூச திருவிழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், மஹா தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:30 மணிக்கு தேரோட்ட விழா நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்ட விழாவில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கோவில் செயல் அலுவலர் சுகுணா, தி.மு.க., நிர்வாகிகள் விஜயகுமார், வேலுசாமி, முத்து குமாரசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

* புகழிமலை, பாலசுப்பிரமணிய கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த, 4ல் கிராம சாந்தி, 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, தைப்பூச திருவிழாவையொட்டி, மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும், 14ல் கொடியிறக்கம், 15ல் விடை மாத்தி நிகழ்ச்சி, 16ல் சிறப்பு பூஜையுடன், தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

* வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், சுவாமி தரிசனம் செய்தார். மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ.,பேரவை செயலர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலர் கமலகண்ணன், முன்னாள் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட அ.தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.

* அரவக்குறிச்சி, முருகன் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அரவக்குறிச்சி ஊர் மக்கள் சார்பாக, கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் அமைந்துள்ள மொட்டையாண்டவர் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

* கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் கொண்டு முருகனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. பின், வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement