சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்., எம்.பி., குற்றவாளி
புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 1984 அக்., 31 ல் காங்., மூத்த தலைவரும், அப்போதைய பிரதமருமான இந்திராவை, சீக்கிய பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் பல சீக்கியர்கள், வன்முறை கும்பல் தாக்குதலில் உயிரிழந்தனர். அந்த ஆண்டு நவ., 1 ல் சரஸ்வதி விஹாரில் இருவரை கொலை செய்தது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், உத்தரவு இன்றைய நாளுக்கு( பிப்.,12) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து உத்தரவிட்டார்.
சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சஜ்ஜன் குமார் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.