ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா?: சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை
ஐதராபாத் : பட வெளியீட்டு விழாவில் தனது மகன் ராம் சரணுக்கு அடுத்து பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று தான் பயப்படுவதாகவும், ஆண் குழந்தை பெற வேண்டும் என கேட்பதாகவும் நடிகர் சிரஞ்சீவி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ‛பிரம்ம ஆனந்தம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பெண் பிள்ளைகள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
அவர் கூறியதாவது, ‛‛வீட்டில் நான் இருக்கும்போது என்னை சுற்றி பேத்திகள் மற்றும் அதிகம் பெண்களே இருக்கிறார்கள். இதனால் மகளிர் விடுதியின் வார்டனை போன்று நான் உணர்கிறேன். மேலும் எனது பரம்பரை தொடர இந்த முறையாவது மகனை பெற வேண்டும் என என் மகன் ராம் சரணை கேட்டுக் கொள்கிறேன். மேலும் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயப்படுகிறேன்'' என தெரிவித்தார்.
சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரணுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார். மேலும் சிரஞ்சீவியின் இரு மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
பாலின பாகுபாடு மறைந்து ஆண், பெண் சமம் என உலகம் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அவர்கள் தான் குடும்பத்தின் வாரிசு என்பது போன்று பேசியிருக்கும் சிரஞ்சீவியின் கருத்து சர்ச்சையாகி இருப்பதுடன் பலரும் வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.