பிரான்சில் இந்திய துணை தூதரகம் திறப்பு; மோடி, மேக்ரோன் இணைந்து பங்கேற்பு


மார்செய்ல்ஸ்: பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை பிரதமர் மோடியும், அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர்.

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடு என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், மார்செய்ல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர்.

முன்னதாக, தூதரக திறப்பு நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய பாரம்பரிய இசையான டோல் இசைக்கருவி வாசிப்பதை இருநாட்டு தலைவர்களும் பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து, மஸார்குஸில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், இமானுவேல் மேக்ரானும் மரியாதை செலுத்தினர்.


இது குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், 'பிரான்ஸில் உணர்வுமிக்க நகரமான மார்செய்ல்ஸ் நகரில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தோம். இந்த தூதரகமானது, இரு நாடுகளுக்கு இடையே கலாசாரம், பொருளாதாரம் மற்றும் மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும். இந்தியாவுக்கும், மார்செய்ல்ஸ் நகருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து நன்கு தெரியும். முதல் உலகப்போரின் போது, இந்திய ராணுவத்தினருக்கு முக்கிய தளமாக இந்த நகரம் இருந்தது. அதுமட்டுமில்லாமல், வீர சாவர்க்கருக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புடையது,' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement