அரசு டாக்டர் தேர்வில் குளறுபடி; சான்றிதழ் தாமதத்தால் குழப்பம்

1



திருநெல்வேலி: தமிழக அரசு மருத்துவ பணிகள் தேர்வாணையம் நடத்தும் உதவி டாக்டர் தேர்வில் சான்றிதழ்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.


தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது அரசு டாக்டர் பணிக்கு அசிஸ்டண்ட் சர்ஜன் எனும் 2642 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. எம்.பி.பி.எஸ்., முடித்து கடந்த 2024 மே மாதம் 15 ம் தேதி வரை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு மேற்கொண்டவர்கள் இதில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மருத்துவ பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 18 ஆயிரம் பங்கேற்றனர். 4500 பேர் தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.2018ல் மருத்துவக்கல்லுாரியில் நுழைந்து 2024 மே மாதம் படிப்பை முடித்து நடப்பாண்டில் சான்றிதழ் பெறுபவர்களும் இதில் பங்கேற்பதற்காக மருத்துவ கவுன்சிலில் பதிவு தேதியை 2024 ஜூலை 15 வரை நீட்டித்தது.

தாமதம்



தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு படிப்பு சான்றிதழ்களை எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை வழங்குகிறது. தனியார் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு விரைவாக கிடைத்தன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி, கீழ்பாக்கம், ஓமந்துாரார் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ். முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 2024 ஜூலை 15ம் தேதிக்குள் பலரும்
பதிவு செய்ய முடியாமல் போனது.

நேற்று சென்னையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பல அரசு கல்லுாரி மாணவர்கள் இந்த பாதிப்பில் இருந்தனர். கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் வருகைக்காக காத்திருந்து பின்னர் தாமதமானதால் சான்றிதழ்கள் வந்தும் மாணவர்களுக்கு கொடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது என தகவல் வெளியானது.


இத்தகைய குளறுபடியால் பல மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு பெறுவதற்கான தேதியை நீட்டித்து முறைப்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement