இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்; அ.தி.மு.க.,வினர் அச்சம்!

14

இரட்டை இலை சின்னம் குறித்து, தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், அ.தி.மு.க., வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமோ என்ற அச்சம், அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.


இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக,தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஏற்கனவே விதித்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று நீக்கியுள்ளது. விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., கட்சி விதிகளில் திருத்தம் செய்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதன் அடிப்படையில் பொதுச்செயலராக பழனிசாமி தேர்வானது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம் மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.


பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைந்த பின்னரே, இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. ஏழு ஆண்டுகளுக்குபின், மீண்டும் இரட்டைஇலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2017ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, மத்தியில் ஆளும் பா.ஜ., இருந்தது. இப்போதும் அவரைத்தான் பா.ஜ., ஆதரிக்கிறது. இதுதான் பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


பா.ஜ., மேலிடத்தை பொறுத்தவரை, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, எந்த முடிவுக்கும் தயாராக உள்ளது. அ.தி.மு.க., இல்லாத கூட்டணியால், தி.மு.க.,வை வெல்ல முடியாது என்றும், பா.ஜ., மேலிடம் கருதுகிறது. ஆனால், பா.ஜ., திட்டங்களுக்கு உடன்பட, பழனிசாமி மறுத்து வருகிறார். பா.ஜ.,வுக்கு பதிலாக, விஜய்யின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், பா.ஜ., தனித்து விடப்படும் நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த, பா.ஜ., எதையும் செய்யும் என்ற அச்சம், பழனிசாமி ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement