உயிரிகளை கண்டறிவதில் உள்ள சிக்கல்

பூமியைத் தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்ற தேடல் நீண்ட காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக, கடல்களை உடைய கோள்களிலும் துணைக்கோள்களிலும் தீவிரமாக விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.

என்செலேடஸ் (Enceladus) என்பது சனியின் துணைக்கோள். இதில் நிலத்திற்குக் கீழே கடல் இருக்கிறது. அங்கு நுண்ணுயிர்கள் வாழ வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தக் கோளின் மேற்பரப்பில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ளன. அவற்றின் உள்ளே பார்த்தால் தான் அடியில் கடல் இருப்பது தெரியும்.

இந்தக் கோள் மட்டுமல்லாது கடல்களை உடைய பெரும்பாலான கோள்களிலும் துணைக் கோள்களிலும் ஆய்வு மேற்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

அதாவது நாம் அனுப்பும் விண்கலன்களால் ஒரு கோளின் மேற்பரப்பை மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.

கடலை ஆராய்வது எளிதல்ல. அப்படியே கடலில் உள்ள திரவங்களை ஆராய்ச்சி செய்தாலும் கூட அங்கு உயிர்கள் வாழ்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இதற்குக் காரணம் அங்கு உயிர்கள், நுண்ணுயிரிகள், உயிர் உற்பத்திக்குத் தேவையான வேதிப்பொருட்கள், கரிமப் பொருட்கள் ஆகியவை கடலின் ஆழத்தில் கூட இருக்கலாம். அவை மேற்பரப்பிற்கு வந்தால் மட்டுமே ஆராய முடியும்.

இவை பல்வேறு படலங்களைக் கடந்து மேற்பரப்பிற்கு வரும்போது தன்மை திரிந்து விடவும் வாய்ப்பு உண்டு.

எனவே மேற்பரப்பை மட்டும் ஆய்வு செய்து, அங்கே உயிர் உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியாது.

பூமியில் உள்ள கடலின் மேற்பரப்பை மட்டும் ஆராய்ந்து விட்டு, கடலுக்கு அடியில் என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியாதோ அது போலத்தான் இதுவும்.

தவிர என்செலேடஸ் துணைக்கோளில் உள்ள திரவம் பல படலங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு ஜாடியில் எண்ணெயும் தண்ணீரும் சேர்த்து வைத்தால் அவை எப்படி ஒட்டாமல் தனித்தனிப் படலங்களாக இருக்குமோ அதுபோலத் தான் இந்தக் கோளில் உள்ள திரவமும் படலங்களாக உள்ளன.

எனவே கீழே, ஆழத்தில் உள்ள படலங்களில் உயிர்கள் வாழ்ந்தாலும் கூட அவற்றை நம்மால் கண்டறிய முடியாது.

அவை மேலே வருவதற்கான வாய்ப்பும் குறைவு. இதுபோன்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் போதாது.

கடலுக்கு அடியில் சென்று ஆராய்ந்தால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement