குவைத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி கணவன், மனைவி மீது வழக்கு

துாத்துக்குடி:குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.

துாத்துக்குடி லுார்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜ் 33. தனியார் மீன் கம்பெனியில் சூப்பர்வைசர். கேரளாவைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவர் அடிக்கடி அந்த மீன் கம்பெனிக்கு வந்து செல்வதால் பழக்கம் ஏற்பட்டது.

அப்துல் கலாம், குவைத் நாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜன்டாக செயல்படுவதாக கூறினார். குவைத் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். எனவே சுரேஷ்ராஜ் தனக்கு குவைத் நாட்டில் வேலை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக அப்துல்கலாமிடம் ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை வாங்கிய அப்துல்கலாம் அதன் பிறகு வேலைக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை. சுரேஷ் ராஜ் போன் செய்தாலும் பதில் அளிக்கவில்லை. எனவே சுரேஷ் ராஜ், தாளமுத்துநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அப்துல் கலாம், மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement