கொலை முயற்சி வழக்கில் 5 பேர் சரண் தி.மு.க., கவுன்சிலரை விசாரிக்க திட்டம்
திருப்பூர்:திருப்பூர் அருகே சகோதரர்களை கொல்ல முயற்சித்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர், தாராபுரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர்கள் அசோக்குமார், 31, சந்திரசேகர், 29; சகோதரர்கள். கடந்த ஆண்டு பிப்., 26ல் அதே பகுதியை சேர்ந்த, மீன் கடை நடத்தி வரும் நாகராஜன், 58 என்பவரை நண்பர்களுடன் சேர்ந்து சகோதரர்கள் வெட்டி கொன்றனர்.
நாகராஜன், திண்டுக்கல் மாநகராட்சி 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சிவகுமாரின் தந்தை. இவ்வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அசோக்குமாரும், சந்திரசேகரும் தற்போது, திருப்பூர் கோவில்வழியில் தங்கியுள்ளனர்.
பிப்., 7ம் தேதி, இருவரும், அறிமுகமான 17 வயது சிறுவனுடன் பைக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக சென்றனர். திருப்பூர் மாவட்டம், குண்டடம், இடையன்கிணறு அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது.
காரில் இருந்த கும்பல், கத்தியுடன் துரத்தியது. காயத்துடன் தப்பிய, மூவரும் போலீசாருக்கு தகவல் அளித்து உயிர் தப்பினர். கொலை முயற்சி வழக்கு பதிந்து குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழக்கு தொடர்பாக, செல்வகுமார், 30, நாகராஜ், 28, அருண்குமார், 28, நிதீஷ்குமார், 28, பரத், 30, என, ஐந்து பேர் நேற்று தாராபுரம் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர்.
போலீசார் கூறியதாவது:
கடந்த, ஐந்து ஆண்டுகள் முன்பு சகோதரர்களின் பெற்றோர், முன்விரோதத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக, கவுன்சிலர் சிவகுமார் உட்பட, 18 பேர் மீது வழக்கு உள்ளது. பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க சிவகுமாரின் தந்தையை கடந்த ஆண்டு சகோதரர்கள் கொன்றனர்.
தற்போது கோர்ட்டில் சரணடைந்துள்ள ஐந்து பேரை கோர்ட் அனுமதியோடு 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்ததா என்ற சந்தேகம் உள்ளதால், கவுன்சிலர் சிவகுமாரையும் விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.