மாவட்டத்திற்கு தலா 5 அமுதம் அங்காடிகள் 

சென்னை:தமிழகம் முழுதும், மக்களுக்கு வெளிச்சந்தையை விட, சற்று குறைந்த விலைக்கு மளிகைப் பொருட்கள் வழங்க, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்டத்திற்கு, தலா ஐந்து அமுதம் பல்பொருள் அங்காடிகளை துவக்க உள்ளது.

வெளிச்சந்தையில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' பெயரிலும், கூட்டுறவு சங்கங்கள், 'காமதேனு' பெயரிலும், பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன. வாணிப கழகம், சென்னையில் 17, கடலுாரில் இரண்டு அமுதம் மற்றும் மாநிலம் முழுதும், 61 சிறிய அங்காடிகளை நடத்துகிறது.

இவை துவக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால், பல அங்காடிகள், சேதமடைந்து காணப்படுகின்றன.

மேலும், குறைந்த அளவிலே பொருட்கள் விற்கப்படுவதால், அதிகம் பேர் வருவதில்லை. தனியார் அங்காடிகள் குளிர்சாதன வசதியுடன், எப்.எம்.சி.ஜி., எனப்படும் விரைவில் விற்பனையாகக் கூடிய, அனைத்து பொருட்களையும் விற்கின்றன. இதனால், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.

தனியாருக்கு இணையாக அமுதம் அங்காடியை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னை அண்ணா நகர், கோபாலபுரம் அங்காடிகள் நவீன மயமாக்கப்பட்டு, ஒவ்வொரு கடையிலும், 2,500 - 3,000 பொருட்கள் விற்கப்படுகின்றன.

இதனால், அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல், அனைத்து அமுதம் அங்காடிகளையும் புனரமைப்பதுடன், கூடுதலாக மாநிலம் முழுதும், 100 அங்காடிகளை திறக்க உணவுத் துறை முடிவு செய்தது.

அதற்கு இடம் கேட்டு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடந்த ஆண்டில் கடிதம் எழுதப்பட்டது.

இதற்கு, அரசு கட்டடங்களில் காலியாக இடங்களை ஒதுக்க, பல மாவட்ட நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அந்த இடங்களை ஆய்வு செய்து, மாவட்டத்திற்கு தலா ஐந்து அமுதம் அங்காடிகளை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு, அரசிடம் நிதி ஒதுக்கீடு அனுமதியை பெற்று, விரைவில் பணிகள் துவக்கப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement