மன்னார் வளைகுடா பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்க ஏற்பாடு
ராமநாதபுரம்,:கடல் வளத்தையும்,கடல்வாழ் அரிய உயிரினங்களையும் பாதுகாக்கும் பொருட்டு செயற்கை பவளப்பாறைகள் அமைக்க மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகின் வளம் நிறைந்த கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா முக்கியமானது. இதன் காரணமாக மத்திய அரசு 1989ல் துாத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 560 சதுர கி.மீ. மன்னார் வளைகுடா பரப்பை தேசிய கடல்சார் உயிரின பூங்கா என அறிவித்துள்ளது.
இப்பூங்கா பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், மாங்குரோவ் காடுகள் உள்ளன. இதில் 104 வகையான பவளப் பாறைகள், 147 வகை கடற்பாசிகள், 160 வகை இடம்பெயர்ந்து செல்லும் பறவையினங்கள், 450 வகையான மீன் இனங்கள் என பல வகை கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன.
நடவடிக்கை
மேலும் உலகின் அரிய வகை கடல் பசு (டுகாங் டுகான்), டால்பின்கள், கடற்குதிரை, கடற்புல் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க மன்னார் வளைகுடா கடல் வளத்தையும், அதில் வாழும் உயிரினங்களை பாதுகாக்க செயற்கை கடற்புற்கள் வளர்க்கவும், பவளப்பாறைகள் அமைக்கவும் ராமநாதபுரம் வன உயிர்கோள காப்பக அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் 'கடல் வளத்தை பாதுகாக்க மரைன் போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கூட்டு ரோந்து செல்கிறோம். ஆமை, கடல்பசு ஆகியவை மீனவர்கள் வலையில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விட்டுவிட அறிவுரை வழங்கப்படுகிறது.
வன உயிரினக் காப்பாளர் முருகன் மேற்பார்வையில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பிற்காகசெயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் அமைக்கப்படுகின்றன. 2023--24ம் ஆண்டில் சிங்கிலி தீவு, கீழக்கரை சரகத்தில் 2 ஏக்கரில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படுகிறது.
2024-25ல் கடல் வளத்தை பெருக்குவதற்கு உயிரினங்களை பாதுகாக்க கூடுதலாக செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.