வக்பு மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை பார்லியில் தாக்கல்; அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு

13

புதுடில்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31ம் தேதி துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.



இந்நிலையில், இன்று (பிப்.,13) காலை 11 மணிக்கு அவை கூடியதும், வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லி கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


ராஜ்யசபாவில், பா.ஜ.,எம்.பி., மேதா விஷ்ரம் குல்கர்னி அறிக்கையை தாக்கல் செய்தார். பார்லி கூட்டுக்குழுவின் அறிக்கை ராஜ்யசபாவில் ஏற்று கொள்ளப்பட்டது. பின்னர் அவை நடந்து வருகிறது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

Advertisement