ரஜத் படிதர் புதிய கேப்டன்: பெங்களூரு அணிக்கு நியமனம்

பெங்களூரு: ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன் வரும் மார்ச் 21ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த நவம்பரில் நடந்தது. பெங்களூரு அணியில் இருந்து கேப்டன் டுபிளசி (தென் ஆப்ரிக்கா) விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக இந்தியாவின் ரஜத் படிதர் 31, நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த ரஜத் படிதர், 2021ல் பெங்களூரு அணியில் இணைந்தார். கடந்த ஆண்டு சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20'), விஜய் ஹசாரே டிராபியில் (50 ஓவர்) மத்திய பிரதேச அணியை வழிநடத்தினார். இதில் சையது முஷ்தாக் அலி டிராபியில் ரஜத் படிதர் தலைமையிலான மத்திய பிரதேச அணி பைனல் வரை சென்றது.


ரஜத் மகிழ்ச்சிரஜத் படிதர் கூறுகையில், ''பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கோலியிடம், அவரது கேப்டன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். இவரது ஆலோசனை அணியை சிறப்பாக வழிநடத்திட எனக்கு உதவும் என்று நம்புகிறேன்,'' என்றார்.


கோலி பாராட்டுபெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலி கூறுகையில், ''கேப்டன் பதவிக்கு நீங்கள் தகுதியானவர். நானும், சகவீரர்களும் உங்களுக்கு பின்னால் இருப்போம். உங்களது அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக பெங்களூரு ரசிர்களின் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள், வாழ்த்துகள்,'' என்றார்.




எட்டாவது வீரர்


ஐ.பி.எல்., அரங்கில் பெங்களூரு அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட 8வது வீரரானார் ரஜத் படிதர். ஏற்கனவே இந்தியாவின் ராகுல் டிராவிட் (2008), இங்கிலாந்தின் பீட்டர்சன் (2009), இந்தியாவின் கும்ளே (2009-2010), நியூசிலாந்தின் வெட்டோரி (2011-12), இந்தியாவின் விராத் கோலி (2011-23), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (2017), தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (2022-24) கேப்டனாக இருந்தனர்.

Advertisement