போலி ஆவணத்தில் உரிமம் பெற்ற ஹோட்டலுக்கு 'சீல்'
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853960.jpg?width=1000&height=625)
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் பகுதியில், சுகந்தி, 38, என்பவருக்கு சொந்தமான 1,000 சதுர அடி நிலத்தில் கடை உள்ளது.
செல்வகுமார் என்பவர் ஹோட்டல் நடத்த, 2009ல் வாடகைக்கு எடுத்திருந்தார். முறையாக வாடகை செலுத்தாததால், கடையை திருப்பி தரும்படி, சுகந்தி கூறினார்.
மூன்று மாதம் அவகாசம் கேட்ட செல்வகுமார், வாடகைக்கு எடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்து, அதை வைத்து மாநகராட்சியில் தொழில் உரிமம் பெற்றுக்கொண்டார். இதை அறிந்த சுகந்தி, மாநகராட்சியில் கடிதம் கொடுத்து, உரிமத்தை நிறுத்தக் கூறினார்.
கடையை காலி செய்யாததால், நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில், ஆவணத்தை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். இதில், சுகந்தி கையெழுத்தை போலியாக போட்டு ஆவணம் தயாரித்தது தெரிந்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, துரைப்பாக்கம் போலீசார் செல்வகுமார் மீது வழக்கு பதிந்தனர். மாநகராட்சி உத்தரவின்படி, வருவாய் அதிகாரி யுகமணி தலைமையிலான ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் கடைக்கு, 'சீல்' வைத்தனர்.
தலைமறைவான செல்வகுமாரை, துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.