அறுவடைக்கு தயாரான ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ. 600க்கு விற்பனை

உடுமலை:உடுமலை அருகே, கேரளா மாநிலம் காந்தலுார் பகுதிகளில், ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை துவங்கியுள்ளது.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், காந்தலுார், மறையூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில், குளிர் அதிகமுள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும், ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி உள்ளிட்ட பயிர்கள், இப்பகுதிகளில் நிலவும் குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக சாகுபடி செய்யப்படுகிறது.

காந்தலுார், பெருமலை, கொழுத்தமலை, ஆதிவயல், கொளச்சி வயல், வெட்டுக்காடு, குகநாதபுரம், புத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

புனே பகுதியிலிருந்து, குளிர்சாதன வசதியுள்ள வாகனத்தில், நாற்றுக்கள் வாங்கி வந்து, இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. 3 மாதம் சாகுபடி காலமாக கொண்ட இப்பயிரில், ஒன்றரை மாதம் முதல், பழங்கள் அறுவடை செய்ய முடியும்.

தற்போது, சாகுபடி செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை துவங்கியுள்ளது. ஒரு கிலோ, ரூ.600 ரூபாய் வரை பழங்கள் விற்பனை செய்யப்படுவதோடு, ஜாம், ஒயின் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement