கல்லுாரி மாணவரை வெட்டிய மூவர் கைது

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலப்பிடாவூரைச் சேர்ந்த ராமன் மகன் அய்யாசாமி 19; பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் சிவகங்கை அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கல்லுாரி சென்று, உறவினரான பொன்முத்துவுடன் தன் பைக்கில் வந்தார்.

மாலை, 6:30 மணிக்கு மேலப்பிடாவூரில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தன் வீட்டிற்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் குறுக்கே வந்தார்.

பைக்கில் இருந்து இறங்கி அவரை ஓரமாக செல்லுமாறு கூறிவீட்டு, மீண்டும் பைக்கை எடுக்க முயன்ற போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார், 20, ஆதீஸ்வரன், 23, வல்லரசு, 24, ஆகிய மூன்று பேர், ஜாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, அய்யாசாமியுடன் தகராறு செய்தனர்.

வினோத், அய்யாசாமியை வாளால் வெட்டியதில் காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மானாமதுரை சிப்காட் போலீசார் வினோத் உள்ளிட்ட மூவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement