பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய வரையறை தயாரிக்கிறது தமிழக அரசு

சென்னை; அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறித்த, 'ஏசெர்' அறிக்கை பற்றி, பலரும் கருத்துச் சொல்கின்றனர். இதுகுறித்து, முன்னர் பள்ளி கல்வித்துறையை நிர்வகித்த, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டேன். 'இதுபோன்ற அறிக்கை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும். அதில், பீஹாரை விட, தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாக தகவல் இருக்கும். அதை நம்ப வேண்டாம்' என்றார்.
ஏசெர் அறிக்கையை வெளியிட்டுள்ள, 'பிரதாம்' அறக்கட்டளைக்கு, உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், அந்த மாநில கல்வித்துறைகள் தான் ஆய்வு முடிவுகளை தந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் பெயர் தெரியாத அமைப்புகளிடம் இந்த பணியை ஒப்படைத்து, கிராமத்தில் ஏதோ ஓரிரு வீடுகளுக்கு சென்று தகவல் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விட, தமிழக அரசு, 10 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்து, தரவுகளின் வாயிலாக அறிக்கை அளிப்போம். அதில், ஆசிரியர்களின் தகுதிகள், மாணவர்களின் திறமைகள் துல்லியமாக வெளியாகும். அப்போது, கல்வியில் சிறந்ததமிழகம் என்பது நிரூபணமாகும்.
பள்ளிகளில் பாலியல் குற்றம் நடந்தது குறித்து, 'மாணவர் மனசு' என்ற புகார் பெட்டிகள் மற்றும், 14417 என்ற தொலைபேசி எண் வழியாக புகார்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 'போக்சோ' சட்டத்தின் வாயிலாக தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கான வரையறையை உடனடியாக தயாரிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்; நான்கு நாட்களில் தயாராகி விடும். அதுவந்த பின், இனி இதுபோன்ற தவறுகளே நடக்காத வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், போலீஸ், சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுவரை, 238 பாலியல் புகார்கள் பெறப்பட்டதில், 11 பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது; ஏழு பேர் இறந்து விட்டனர்; 56 பேருக்கு, மார்ச் மாதத்தில் தீர்ப்பு வர உள்ளது; 50க்கும் மேற்பட்டோர் விசாரணையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி
-
தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
-
சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்