'வொர்க் ப்ரம் கார்' பெண்ணுக்கு அபராதம்

பெங்களூரு பெங்களூரில், கார் ஓட்டியபடியே 'லேப்டாப்' இயக்கி சென்ற பெண்ணை மடக்கிப் பிடித்த போலீசார், அவருக்கு அபராதம் விதித்தனர்.

கர்நாடகாவின் பெங்களூரில், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவர், காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிய நிலையில், மடியில் லேப்டாப் வைத்து, அதையும் இயக்கியபடி சென்றார்.

இதை பார்த்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை விரட்டிச் சென்று மடக்கினர். அவருக்கு அபராதம் விதித்ததுடன், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அந்த பெண், லேப்டாப் இயக்கியபடியே கார் ஓட்டிய, 'வீடியோ'வை பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், 'வீட்டில் இருந்து வேலை பாருங்கள், கார் ஓட்டும்போது அல்ல' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பெண்ணை கண்டித்தும், ஆதரித்தும் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலர் கோரியிருந்தனர்.

அதே நேரம், 'யாரை குறை சொல்வது? அந்த பெண்ணையா அல்லது அவரை நிம்மதியாக கார் ஓட்டக்கூட அனுமதிக்காத அவர் வேலை செய்யும் நிறுவனத்தையா?' என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

பெங்களூரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலும், இதுபோன்ற செயல்களுக்கு காரணம் என பலர் தெரிவித்துள்ளனர்.

Advertisement