தீபாவளி சீட்டு ரூ.23.14 லட்சம் மோசடி தாய், மகள்கள் உட்பட நால்வர் கைது
தேனி:தேனியில் தீபாவளி சீட்டு நடத்தி 40 பேரிடம் ரூ.23.14 லட்சம் மோசடி செய்த மேலக்கூடலுார் சண்முகப்பிரியா 44, அவரது மகள் மவுனிகா 26, அஜிதா 25,அவரின் கணவர் கர்ணன் 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலக்கூடலுாரை சேர்ந்தவர் தமிழரசி 64. இவரின் வீட்டின் அருகில் சண்முகப்பிரியா 50, வசிக்கிறார்.சண்முகப்பிரியா அவரது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தினார். வாரந்தோறும் ரூ.500 வீதம் 52 வாரங்கள் செலுத்தினால் 52 வாரத்தின் முடிவில் ரூ.31,500 வழங்கப்படும் என, தெரிவித்தார். இதன்படி தமிழரசியும், அவரது குடும்பத்தினரும் ரூ.4.85 லட்சம் செலுத்தினர்.
இதுதவிர மேலும் 39 பேர் இணைந்து, ரூ.18.25 லட்சம் செலுத்தினர். ரூ.23.14 லட்சத்தை பெற்ற சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ்,அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து மோசடி செய்தனர்.
எஸ்.பி., சிவபிரசாத்திடம் தமிழரசி புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர். தீபக்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் பெற்ற நிலையில்,போலீசார் சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா,அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோரை நேற்றுகைது செய்து, தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.