சபரிமலை சென்ற பஸ், வேன் மோதல் 3 பேர் பலி: 12 பேர் பலத்த காயம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854207.jpg?width=1000&height=625)
தேனி:தேனி மதுராபுரி விலக்கில் நேற்றிரவு திண்டுக்கல் -- குமுளி பைபாஸ் ரோட்டில் சபரிமலையிலிருந்து திரும்பிய டிராவல்ஸ் வேன் சபரிமலை சென்ற பஸ் மீது மோதியதில் ஒசூரு தேர்பேட்டை கோபியின் ஏழு வயது மகன் கனிஷ்க், அப்பகுதி நாகராஜ் 40, தெள்ளகொண்டான் பத்தாபள்ளி சூர்யா 23, பலியாயினர். அவற்றில் பயணித்த 12 பேர் படுகாயமுற்று தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றிரவு ஒசூரில் இருந்து 2 சிறுவர்கள் 7 பெரியவர்கள் உட்பட 9 பேர் கொண்ட குழுவினர் வேனில் சபரிமலை சென்று, மீண்டும் ஊருக்கு திரும்பினர். சேலம் இளம்பிள்ளையில் இருந்து சபரிமலை நோக்கி தனியார் பஸ் சென்றது. பஸ்சில் பெண்கள், ஆண்கள் உட்பட 42 பேர் பயணித்தனர்.
மதுராபுரி திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் வேன் பஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களின் முன்பகுதி சுக்குநுாறாக நொறுங்கியது. வேனில் பயணித்த கனிஷ்க், நாகராஜ், வாலிபர் சூர்யா பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தனர்.
வேனில் பயணித்த ஒசூர் ராமன் 45, சண்முகராஜா 25, பரத் 23, உமாசங்கர் நகர் சசிதரன் 25, ராமு மகன் கவின் 13, பஸ்சில் பயணித்த சேலம் சங்ககிரி வசந்தா 62, சித்தாயி 65, சுந்தராம்பாள் 58, செல்வி 44, கைலாசம் மனைவி பழனியம்மாள் 55, ராஜா மனைவி பழனியம்மாள் 49, செல்வராஜ் மனைவி விஜயா 65, ஆகியோர் படுகாயமுற்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அல்லிநகரம் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.