ஆசிரியர்கள் கண்ணியம் காக்க வேண்டும்! கருத்தரங்கில் குழந்தைகள் நலக்குழுவினர் கருத்து

திருப்பூர்; 'போக்சோ சட்டம் மிகவும் கடுமையானது. ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்' என, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி பேசினார்.

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்,' விழிப்புணர்வு கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது:

குழந்தை திருமண தடை சட்டத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைக்கும் திருமணம் செய்யக்கூடாது.

குழந்தை திருமணத்தை தடுப்பது, மீட்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது ஆகியவை, குழந்தை திருமண தடை சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

குழந்தை திருமணம் செய்து வைப்போருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும்.

குழந்தை திருமணத்தால், பெண்களின் கல்வி தடைபடுகிறது; அவர்களின் அறிவுக்கண் திறக்கப்படாமல்போகிறது. பள்ளிகளில், ஆசிரியரே மாணவியரிடம் அத்துமீறும் சம்பவங்கள் நடக்கின்றன.

பெரும்பாலான போக்சோ வழக்குகளில், குற்றவாளிகளை பார்த்தால், தனி மனித வாழ்க்கை, குடும்பம், சமூகம் என எல்லாவகையிலும் நல்லவர் என்று சொல்லும் அளவிலேயே உள்ளனர்; இவர்களா இப்படி செய்திருப்பார்கள் என்றே எண்ணம் எழும். மாணவ, மாணவியரிடம் ஆசிரியர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும். மாணவர்களை தனியே அழைத்து பேசுவது, புகைப்படம் எடுப்பது, தொடுவது கூடாது.

சாதாரண குற்றங்களில், புகார் அளிப்பவர்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். போக்சோவில், குற்றம்சாட்டப்பட்டவர்தான், தன்னை நிரூபிக்க வேண்டும். போக்சோ சட்டம் மிக கடுமையானது.

குழந்தைகள் நலக்குழுவினர், பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டினால், ஆசிரியர்களுக்கு எத்தகைய தண்டனை விதிக்கப்படும் என, விளக்கம் அளிக்கவேண்டும்.

பள்ளிகளில், போக்சோ கமிட்டி, போஸ் கமிட்டி, குழந்தைகள் பாதுகாப்புக்குழு உள்பட, 12 வகையான குழுக்கள் உள்ளன.

இந்த குழுக்கள் சிறப்பாக செயல்பட வழிகாட்ட வேண்டும். அதேபோல், வேறு காரணங்களுக்காக, பொய்யாக போக்சோ புகார் கூறுவதும் தவிர்க்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா பேசியதாவது:

இரண்டு வயது, மூன்று வயது பெண் குழந்தைகளும் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இந்த குழந்தைகளால் தனக்கு நேர்ந்ததை வாயால் சொல்லத்தெரியாது.

அதேநேரம் சைகையால் செல்லி விடுவர்; அவற்றையெல்லாம், வீடியோவாக பதிவு செய்துகொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கும். எனவே, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தெரியவந்த உடனேயே போலீசில் புகார் அளித்துவிடவேண்டும்.

மருத்துவ பரிசோதனைகளுக்கு முன்னரே, குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துவிடுவது நல்லது. தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல்களை, மாணவ, மாணவியர் ஆசிரியர் முன்னிலையில் சொல்லமாட்டார்கள்.

எனவே, மாணவர்களுக்கு தனியே விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவரங்களை பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement