கர்நாடகாவின் பெருமை 'கம்பாலா'

விளையாட்டு என்பது ஏதோ பொழுது போக்குக்காக விளையாடுவது அல்ல. மாறாக, ஒவ்வொரு விளையாட்டிற்கு பின்னும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. குறிப்பிட்ட சில விளையாட்டுகள், ஒரு இனத்தின் அடையாளமாகவும் இன்று வரை திகழ்ந்து வருகின்றன.

தமிழகத்தில் எப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறதோ, அது போல, கர்நாடகாவில் மிகவும் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்று கம்பாலா. துளு மொழி பேசுவோர் அதிகம் வசிக்கும் கடலோர பகுதி மாவட்டங்களில் இன்றும் பிரபலமாக நடத்தப்படுகிறது. கம்பாலா என்பதற்கு துளு மொழியில் நெல் பயிரிடப்படும் களிமண் வயல் என்று அர்த்தம்.

வயல்வெளி



நெல் அறுவடையை கொண்டாடும் வகையில், சேறு நிறைந்த வயல் வெளியில் நடத்தப்படுகிறது. தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதி முதல், ஏப்ரல் முதல் பாதி வரை நடக்கிறது.

கடலோரப் பகுதிகளில் உள்ள பன்ட் சமுதாயத்தவர், கம்பாலாவை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இந்த விளையாட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் நிறைந்த ஒரு வயல் பகுதியில் இரண்டு எருமை மாடுகளுடன் ஒரு நபர் ஓடுவார். இதன் பக்கத்தில் மற்றொரு குழுவின் நபரும் எருமை மாடுகளை விரட்டிக் கொண்டு ஓடுவார். 132 அல்லது 142 மீட்டர் துாரமுள்ள பாதையை, யார் முதலாவதாக கடக்கின்றனரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.

தடை விதிப்பு



இப்படி பாரம்பரியமாக நடந்து வந்த விளையாட்டு, 2014ல் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி, தடை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்றவை தடை செய்யப்பட்டன.

இதன்பின் பல விதிகளுக்கு உட்பட்டு, மீண்டும் 2018ல் விளையாட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 2020ல் நடந்த போட்டியில், ஸ்ரீநிவாச கவுடா என்பவர், 142 மீட்டர் துாரத்தை 13.42 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். இவரது சாதனை, உலக புகழ் பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பாலா விளையாட்டு கமிட்டியினர், இவ்விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில், கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று விளையாட்டு போட்டிகளை நடத்தினர். இப்போட்டி, பெங்களூரிலும் நடந்தது.

170 ஜோடிகள்



நாளை சிக்கமகளூரில் உள்ள ஸ்ரீ அமிர்தேஸ்வரா கோவிலுக்கு முன்புள்ள மைதானத்தில் கம்பாலா போட்டி நடக்க உள்ளது. இதில் 170 ஜோடி எருமை மாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அமைச்சர்கள் பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், பிரியங்க் கார்கே ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற பாரம்பரியத்தை பறை சாற்றும் விளையாட்டுகளை நேரில் சென்று பார்த்து வீரர்களை உற்சாகப்படுத்துவதும், ஆதரவு தருவதும் அவசியமாகும்
- நமது நிருபர் -
.

Advertisement