தோட்டக்கலை பயிர்களுக்கு ஆணையம் ராஜ்யசபாவில் தேவகவுடா வலியுறுத்தல்

''கர்நாடகாவில் தோட்டக்கலைத் துறை பயிர்களான பலாப்பழம், புளியம் பழம், நாவல் பழங்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும்,'' என முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தேவகவுடா வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற தேவகவுடா, கர்நாடகாவின் நீர்ப்பாசன பிரச்னைகளை விவரித்தார். அவர் பேசியதாவது:

தோட்டக்கலை விளைச்சல்களுக்கு, ஆணையம் அமைக்க வேண்டும். கர்நாடகாவில் பலா, புளியம், நாவல் பழம் போன்ற தோட்ட விளைச்சல்களுக்கு, ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது விவசாயிகளுக்கு, மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, நாங்கள் அதிக ஆதரவு அளித்தோம். அது இனியும் தொடர வேண்டும். தோட்ட விளைச்சலுக்கு ஆணையம் அமைக்க, மத்திய நிதித்துறை அமைச்சர் முன் வர வேண்டும்.

பெங்களூரில் குடிநீர் பிரச்னை அதிகரிக்கிறது. தண்ணீர் டேங்கர் உரிமையாளர்கள், ஏழை மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனர்.

நிதித்துறை அமைச்சர், குடிநீர் திட்டங்களுக்கு, 1,400 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ஆனால் குடிநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண காவிரி - கோதாவரி நதி இணைப்பு திட்டத்துக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சமீப நாட்களில் கிராமப்புறங்களில் இருந்து, இளம் தலை முறையினர், நகரங்களுக்கு வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், மிகவும் சிறிய, நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்
- நமது நிருபர் -
.

Advertisement