பூங்காவில் திரியும் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சம்

போடி: போடி தென்றல் நகரில் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்த பூங்காவில் திரியும் பாம்புகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
போடி நகராட்சி 26 வது வார்டில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி தெருக்களில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள் அகற்றாததால் டூவீலரில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர்.
தென்றல் நகர் பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்களாக வளர்ந்துள்ளது. வார சந்தையில் 50 க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் கட்டி பயன்பாடு இன்றி திறந்தநிலையில் உள்ளதால் சிலர் சுகாதார வளாகமாக பயன்படுத்தி அசுத்தப்படுத்துகின்றனர். இது குறித்து தென்றல் நகர் குடியிருப்போர் நிர்வாகிகளான காந்தி, ஆனந்த், சுருளிராஜ், மருதமுத்து ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது :
பூங்கா சீரமைக்க வேண்டும்
தென்றல் நகர் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் அமர்ந்து செல்லவும் இரவில் மின்னொலியில் நவீன பூங்காவாக மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டன. பூங்கா முறையாக பராமரிக்காததால் விளையாட்டு சாதனங்கள் திருடுபோனது. தற்போது சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக விளங்குகிறது.
கடந்த ஆண்டு ரூ.பல ஆயிரம் செலவில் சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உடற்பயிற்சி சாதனங்களுடன் சீரமைக்கப்பட்டன. ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்களால் சூழ்ந்து உள்ளது. இதனால் பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூங்காவில் உள்ள முட்புதர்களை அகற்றி பராமரிப்பு செய்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பயன் இல்லாத வணிக வளாகம்
போடி வாரச்சந்தையில் நகராட்சி மூலம் ரூ. 2.50 கோடி செலவில் 50 க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. முறையாக கட்டாததால் நகராட்சி கடைகள் ஏலம் விட்டும் ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
இதனால் 4 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. இங்குள்ள சுகாதார வளாக கதவுகள் திருடப்பட்டு உள்ளன. சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியில் உள்ளதால் இரவில் மது, கஞ்சா பிரியர்கள் வந்து சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. இதனால் இரவில் இந்த ரோட்டில் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைகின்றனர். வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் நகராட்சிக்கு ரூ. பல லட்சம் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. வணிக வளாகங்களை பராமரிப்பு செய்து குறைந்த வாடகைக்கு விட வேண்டும். இங்கு நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டட கழிவுகளால் சிரமம்
தென்றல் நகர் பகுதி தெருக்களில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அருகே தேக்கிய குப்பையை நகராட்சி அகற்றாமல் உள்ளன. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கழிவுகள், குப்பைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.