ஒட்டன்சத்திரத்தில் பனியால் கருகிய வெங்காய பயிர்கள்

6

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயப் பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை சுற்றிய பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் விவசாயம் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடவு செய்யும் வெங்காயம் பங்குனி மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

இந்நிலையில் சில வாரங்களாக மூடுபனி அதிகரித்துள்ளதால் வெங்காய பயிர்கள் பூஞ்சான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

இந்நோய் தாக்கப்பட்ட வெங்காய பயிர்கள் சிவப்பு நிறமாக மாறி கருகி வருகிறது.

இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்காது என்பதால் ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயி சின்னச்சாமி கூறுகையில், இந்தாண்டு பனிப்பொழிவு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருப்பதால் சின்ன வெங்காயம் உட்பட அனைத்து விவசாய பயிர்களின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்

Advertisement