மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மந்தகதியில் மேம்பால பணிகள் நடப்பதால், போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது. நேற்று, 5 கி.மீ., துாரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
6 இடங்களில் மேம்பாலம்:
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் தினமும், 70,000 வாகனங்களும், சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று, வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில், ஒரு இடத்தில் வாகன போக்குவரத்து பாதித்தால் கூட, பல கி.மீ., துாரத்திற்கு வாகன போக்குவரத்து முடங்கும். அப்படிப்பட்ட இச்சாலையில், ஒரே நேரத்தில், 6 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 6 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு அக்.,ல் துவங்கி மந்தகதியில் நடக்கிறது. சாமல்பள்ளம் பகுதியில் மட்டும், ஏறக்குறைய மேம்பால பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
அடிக்கடி விபத்து:
பிப்.,ல் பணிகளை முடித்து விடுவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறினாலும், பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் உள்ளன. பாலம் பணி நடக்கும் பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மேடு பள்ளமாக சமதளமாக இல்லாத சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதால், அடிக்கடி விபத்து, கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பது போன்றவை நடக்கின்றன.
நேற்றைய விபத்து:
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, சுண்டகிரி மேம்பாலம் வேலை நடக்கும் பகுதி சர்வீஸ் சாலையில், கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற லாரியின் ஆக்சில் துண்டாகியது. அதேபோல் மறு மார்க்கத்தில், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் வலது பக்க டயர் வெடித்து பழுதாகியது. அதனால், இரு மார்க்கத்திலும் தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., துாரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்தன. காலை, 9:30 மணிக்கு மேல் தான் இரு சாலைகளிலும், 4 மணி நேரத்திற்கு பின், வாகன போக்குவரத்து சீரானது. பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பணி இழுத்தடிப்பு:
தேசிய நெடுஞ்சாலையில், இப்படி தொடர் கதையாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. பாலம் பணியையும் விரைந்து முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர். கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே ஒரு மணி நேரத்தில் பயணிக்க வேண்டிய, 50 கி.மீ., துாரத்தை கடக்க, 2 மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. அதனால், மேம்பால பணிகள் முடியும் வரை, கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என, தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, மேம்பால பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிப்பார்கள் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
-
பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்
-
இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
-
டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு
-
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
-
20,000 பைலட்கள் தேவை மத்திய அமைச்சர் தகவல்