பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கட்டப்பஞ்சாயத்து: தி.மு.க., - பி.டி.ஏ., தலைவர் மீது அண்ணாமலை புகார்

2

மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த, பிளஸ் 1 மாணவர்கள் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை மூடி மறைக்க, தி.மு.க.,வைச் சேர்ந்த பி.டி.ஏ., தலைவர் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.


சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர்கள் மூவர், ஜன., 22 மாலை, அதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.


கடந்த, 10ல் மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் அளித்த புகாருக்கு பின், ஆத்துார் மகளிர் போலீசார், மாணவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்தனர். நேற்று மாணவர்களை சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் கூறியதாவது:



பாலியல் சீண்டல் தகவல் தெரிந்ததும், வகுப்பாசிரியர், மாணவர்கள் மூவரிடமும் நடந்த விபரங்களை எழுதி வாங்கினர். மாணவர்கள், மாணவியின் வகுப்பாசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிந்தும், போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்களிடம் அடுத்தகட்டமாக விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தை மறைக்க, உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியின் பெற்றோர் வாயிலாக சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் புகார் எழுந்துள்ளதால் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமலை, நேற்று, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு:



ஏழாம் வகுப்பு மாணவி, அந்த பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து வெளியே தெரியாமல் இருக்க, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜோதி, 20 நாட்களாக போலீசில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்.


வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பின்பே, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளிப்பதை தடுத்து தாமதப்படுத்திய, ஜோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் உள்ளன. இதை தடுக்கவோ, பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ நடவடிக்கை இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்போது தான் துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோதி கூறியதாவது:



கடந்த, 22ல் மாணவிக்கு, மூன்று மாணவர்களால் பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. ஜன., 27ல் ஆண்டு விழா நடந்தபோதும் இத்தகவல் தெரியவில்லை. கடந்த, 10ம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்து சென்றேன். அப்போது தான், பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பான தகவலில், மாணவர்கள் தகராறு செய்தது தெரியவந்தது. மாணவர்களை எச்சரித்து அனுப்பினோம்.


மாணவரது வகுப்பாசிரியர், மாணவர்களிடம் எழுதிய வாங்கிய புகார் விபரம், சேலம் முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் சிலர் இப்பிரச்னையை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியை நான் பார்த்ததில்லை. அவரது பெற்றோரை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், புகார் அளிக்கவில்லை என்றும், அண்ணாமலை என் பெயரை குறிப்பிட்டு தவறான தகவல் பதிவிட்டுள்ளார். இதற்கு பின் போலீசார், என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். பள்ளியில் நடந்த விபரம், என் மீது பொய் புகார் கூறும் தகவல்களை தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ''இந்த விவகாரம், கடந்த, 10ம் தேதி இரவு, 10:00 மணிக்கு தான் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை வந்த பின், பள்ளிக்கல்வி துறை மூலம் விசாரிக்கப்படும். ஆசிரியர்கள், இத்தகவலை மூடி மறைத்தது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


- நமது நிருபர் குழு -

Advertisement