கோட்டையூரில் மாசி பங்குனி விழா அம்மன் உருவத்துடன் தீச்சட்டிகள்

காரைக்குடி : கோட்டையூரில் துவங்க உள்ள மாசி பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் உருவம் தாங்கிய வண்ண வண்ண தீச்சட்டிகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் மாசி பங்குனி தொடங்கினாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்களும் தொடங்கிவிடும். பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி பிரசித்தி பெற்றதாகும்.

இத்திருவிழாவின் போது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தீச்சட்டி தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோட்டையூர் பகுதியில் இவ்வாண்டு பக்தர்களுக்கு புதிதாக தீச்சட்டிகளில் அம்மனின் உருவத்தை வரைந்து தீச்சட்டி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

வியாபாரி பாண்டி கூறுகையில்: பொதுவாக மாசி பங்குனி திருவிழாக்களுக்கு தீச்சட்டி விற்பனை அதிக அளவில் இருக்கும். வழக்கமாக தீச்சட்டிகளில் அம்மன் உருவம் தெளிவாக இருப்பதில்லை. பக்தர்கள் பலர் அம்மன் உருவம் தெளிவாக இருக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி தெளிவான அம்மன் உருவம் பதித்து, வண்ணத்தில் தீச்சட்டி தயாரித்து வருகிறோம். முதன்முறை தீச்சட்டி எடுப்பவர்கள் 3 முகம் வைத்து எடுப்பார்கள். 5 முகம் முதல் 16 முகம் வரையிலான தீச்சட்டி உள்ளது. ரூ. 101 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement