l ஆதாரில் பெயர் பதிவு செய்வது எப்படி திணறல்; l குழப்பமான நடைமுறைகளால் மக்கள்

தற்போது குழந்தைகளுக்கு ஆதார் பதிய குழந்தையின் பிறந்த சான்றிதழ், பெற்றோரின் ஆதார் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கான ஆதாரில் பிறந்த சான்றிதழில் உள்ளபடி பெயர் இருக்கிறது. பிறந்த சான்றிதழில் முதல் எழுத்து இருந்தால் (இன்சியல்) ஆதாரில் முதல் எழுத்துடன் பெயர் இருக்கும்.


இல்லாவிட்டால் பெயர் மட்டும் இருக்கும். அதன் பின்னர் மக்கள் தங்கள் தேவைக்கேற்ப ஆதாரில் பெயர் தனியாகவும், பெயருக்கு முன்பாகவோ, பின்பாகவோ பெற்றோரின் முதல் எழுத்தை (இன்சியல்) சேர்த்து ஆதார் பெறுகின்றனர். பல மாணவர்களுக்கு ஆதாரில் பெயர்கள் ஒரே சீராக இல்லை.


குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி பதிவேடு, சான்றிதழ்களில் இன்சியலுடன் பெயர் உள்ளது. பள்ளிக்கூடங்களில் வங்கிக் கணக்கிற்கு பயன்படுத்த வசதியாக பள்ளி பதிவேட்டில் உள்ளபடி இன்சியலுடன் பெயர் வரும்படி ஆதார் எடுக்க வலியுறுத்துகின்றனர்.

ஆதார் கார்டில் இன்சியல் இல்லாதவர்கள் பலரும் மீண்டும் ஆதாரை மாற்ற வேண்டியுள்ளது. அதற்கேற்ப பான் கார்டிலும் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அப்போது தான் பள்ளியில் வழங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும்.

அதுபோல, மத்திய அரசு வழங்கும் பாஸ்போர்ட் ஆவணத்தில் பெயர் மற்றும் குடும்பப்பெயர் என இரண்டே பெயர்கள் தான் உள்ளன. முதல் எழுத்து (இன்சியல்) பதிவிடப்படுவதில்லை. தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அத்தாட்சிக்கான பரிசீலனையில் ஆதார் முதன்மையாக உள்ளது.

அதில் ஆதாரில் இன்சியலுடன் பெயர் உள்ளவர்கள், பெற்றோர் பெயருடன் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படுகிறது. இதனால் அதற்கேற்ப மீண்டும் விண்ணப்பதாரர்கள் ஆதாரை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

இதே போன்று வருமான வரி செலுத்துபவர்களும் ஆதாரில் பெயர் திருத்தம் செய்து கணக்கு தாக்கல் செய்யும் போது அந்த ஆவணங்களுடன் பொருந்தாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆதாரில் பெயருக்கு முன்பு இன்சியல் இருக்க வேண்டுமா, அல்லது பின்னால் இருக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. ஆதாரில் பெயரை இரு முறை மட்டுமே திருத்த முடியும் என்ற விதியும் உள்ளதால் சரியான முறையில் பெயரை ஆதாரில் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதார் மட்டுமின்றி அனைத்து ஆவணங்களிலும் குறிப்பாக பள்ளி, கல்லுாரி சான்றிதழ்களில் பெயர் பதிவிற்கு ஒரே மாதிரியான வரையறை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement