வயல்களில் பயிர்களை காக்க ஒரு எலி பிடிக்க ரூ.4 கூலி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் நெற் பயிர்களை கடித்து நாசம் செய்யும் எலிகளை பிடிக்க வயல்களில் இடுக்கி வைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 2ம் போக நெற்பயிரில் கதிர் விட துவங்கிய நிலையில் தண்டு பகுதியை எலிகள் கடித்து நாசம் செய்கின்றன. இளம் பயிர்களை நாசம் செய்வதால் அவை கருகி விடுகின்றன. இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க இடுக்கி வைத்து எலிகளை பிடிக்கின்றனர். மூங்கிலால் செய்த இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஆங்காங்கே ஊன்றி வைத்து விட்டு, அதன் நடுவே எலிகளுக்கு பிடித்த உணவாகிய தேங்காய் எண்ணெய் கலந்த அரிசி, நெல்லை பகலில் வைத்து செல்கிறார்கள். மறுநாள் அதிகாலை அதில் எலிகள் சிக்கி இருக்கின்றன.

குலசேகரன்கோட்டை தொழிலாளி ராமர்: இந்த தொழிலை சிறு வயது முதல் செய்கிறேன். எலி தொந்தரவிற்கு ஏற்ப வயல்களில் வைக்கும் இடுக்கி ஒன்றுக்கு ரூ.4 கிடைக்கும்.

ஏக்கருக்கு 200 இடுக்கி வைப்போம். ரசாயன மருந்துக்கு எலி கட்டுப்படாது என்பதால் விவசாயிகள் இடுக்கி மீது ஆர்வம் காட்டுகின்றனர். இடுக்கியில் சிக்கும் எலிகளை சமைத்து சாப்பிட பலரும் வாங்கி செல்கின்றனர். அதற்கு நாங்கள் விலை பேசுவதில்லை என்றார்.

Advertisement