பெரியாறு நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை; இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயம் இருப்பதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


முல்லைப் பெரியாறு அணையை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி கதிர்விடும் பருவத்தில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது.



தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணையில் நீர் இருப்பு 2032 மில்லியன் கன அடியாகும். அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

அணையில்104 அடிக்கு மேல் (சில் லெவல்) உள்ள தண்ணீரை மட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். இருந்த போதிலும் தேக்கடி ஷட்டரில் சிக்கியிருக்கும் குப்பையால் 108 அடிக்கு மேல் உள்ள தண்ணீர் மட்டுமே தமிழக பகுதிக்கு வெளியேறும்.

அதனால் பயன்படுத்தக் கூடிய நிலையில் 9 அடி நீர் மட்டுமே உள்ளது. தற்போது அணையில் திறக்கப்பட்டுள்ள 400 கன அடி நீரில் 100 கன அடி மதுரை குடிநீருக்கும், 100 கன அடி லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட பயன்பாட்டிற்கும் போக 200 கன அடி நீர் மட்டுமே முல்லைப் பெரியாறு வழியாக விவசாய பயன்பாட்டிற்கு செல்கிறது. அதுவும் கடுமையான வெப்பத்தால் ஆற்றில் நீர்வரத்து மிக குறைவாகவே செல்கிறது. இச்சூழ்நிலையில் அணை நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெல் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. வரும் ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தேவை உள்ளது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement