மின்சார ரயிலின் நுாற்றாண்டு சேவை மதுரையில் நடைபயணம்
மதுரை:" நாட்டின் முதல் மின்சார ரயில் சேவை மும்பை விக்டோரியா டெர்மினல் - குர்லா ரயில்வே ஸ்டேஷன் இடையே 1925 பிப்.3ல் துவக்கி வைக்கப்பட்டது. இதன் நுாற்றாண்டு சேவையை நினைவுகூரும் வகையில் மதுரை கோட்டம் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டிலுள்ள 66,504 கி.மீ., துார ரயில் பாதையில் 97.05 சதவீதமும், தெற்கு ரயில்வேயில் 5040 கி.மீ., துார ரயில் பாதையில் 95.21 சதவீதமும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மதுரைக் கோட்டத்தில் 1322 கி.மீ., துார ரயில் பாதையில் 94.77 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கும் பணி நடக்கின்றன.
மதுரையில் நடைபயணத்தை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா துவக்கி வைத்தார். கோட்ட அலுவலகத்தில் இருந்து தேனி மெயின் ரோடு, ஸ்டேஷனின் மேற்கு நுழைவு வாயில், ரயில்வே காலனி வழியாக ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட மின்பாதை பொறியாளர் ரோஹன், கோட்ட மின்சார ரயில் பொறியாளர் அமல் செபாஸ்டியன் உட்பட ஊழியர்கள், ஆர்.பி.எப்., வீரர்கள் பங்கேற்றனர்.