வேங்கையை கொன்ற வீரன்; வேங்கையூர் வரலாறு கூறும் கல்வெட்டு

கிருஷ்ணகிரி: காரிமங்கலம் அருகே, பேகாரஹள்ளியாக மருவிய வேங்கையூர், 3 காலகட்டங்களில், 3 முறை தானமாக வழங்கப்பட்டுள்ளதாக, கல்வெட்டு தெரிவிக்கிறது.


கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குனர் சென்னியப்பன் அளித்த தகவலின் படி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பேகாரஹள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.


இது குறித்து, ஓய்வுபெற்ற அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தெற்கு பகுதியிலுள்ள திம்மராயசாமி கோவில் முன், 2 கல்வெட்டுகள் உள்ளன. முதல் கல்வெட்டில், ஒய்சாள மன்னன், 3ம் வல்லாளன் ஆட்சியில், கங்கநாட்டு தகடூர் நாட்டு வெங்கூரன்பள்ளி என்ற இந்த ஊரில், பல பகுதிகளை தானம் அளித்த செய்தியை தெரிவிக்கிறது. 13ம் நுாற்றாண்டில், பேகாரஹள்ளியை, வேங்கையூர் என்றே அழைத்திருக்க வேண்டும் என, புலிகுத்திப்பட்டான்
கல் வெட்டு கூறுகிறது. வேங்கையை கொன்று, ஆநிரைகளை காத்தவனின் வாரிசுகளுக்கு, அப்பகுதியை கொடுத்துள்ளனர்.

இரண்டாவது கல்வெட்டில், விஜயநகர மன்னன் தேவராயன் காலத்தில், இதே ஊரை மீண்டும் சிலருக்கு அளித்த தானத்தை பற்றி கூறுகிறது. இந்த, 2 கல்வெட்டுகள் மற்றும் நடுகல் வாயிலாக, இன்றைய பேகாரப்பள்ளி, 13ம் நுாற்றாண்டில் வேங்கையை கொன்ற வீரனின் நினைவாக வழங்கப்பட்டதால், வேங்கையூர் என்றும், 14ம் நுாற்றாண்டில் மருவி வேங்கூரன்பள்ளி என்றும், தற்போது அது மருவி, பேகாரஹள்ளி எனவும் அழைக்கப்படுகிறது. இது, 3 காலகட்டங்களில், 3 முறை தானமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

அப்பகுதியின் வரலாற்றை, அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement