தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் கடைகளால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி

ஆண்டிபட்டி: கொச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிபட்டியில் நாளுக்கு நாள் பெருகும் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.

பல்வேறு குக்கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ள ஆண்டிபட்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாக உள்ளது. கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்டில் இருந்து தாலுகா அலுவலகம் வரை உள்ள ஒன்றரை கி.மீ.,தூரத்தில் வத்தலகுண்டு ரோடு, ஏத்தக்கோவில் ரோடு, பெரியகுளம் ரோடு, தெப்பம்பட்டி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. தினமும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் கிராமங்களில் இருந்து வரும் உள்ளூர் வாகனங்களும் நகர் பகுதியை கடந்து செல்கிறது.

ஆண்டிபட்டியில் கடந்த காலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை பரப்பி சிறு வியாபாரிகள் சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு போட்டியாக தற்போது 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரங்களில் பொருட்களை பரப்பி வியாபாரத்தை தொடர்கின்றனர்.

சரக்கு வாகனங்கள், தள்ளு வண்டிகளில் பொருட்களை கொண்டு வந்து நெருக்கடியான இடங்களில் ரோட்டில் நிறுத்தி இடைவிடாது ஒலிக்கும் ஒலிபெருக்கியுடன் வியாபாரம் செய்கின்றனர். இது பலருக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. பள்ளி கல்லூரி துவங்கும் முடியும் நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடியால் பலருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

ஆண்டிபட்டியில் ரோட்டை மறித்து செயல்படும் கடைகளை கட்டுப்படுத்த போலீசார், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

ஆண்டிபட்டியில் ரோட்டை மறித்து செயல்படும் நடமாடும் கடைகளை கட்டுப்படுத்தவும், நெருக்கடியான இடங்களில் கடைகள் அமைக்க தடைவிதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement