சேவைத்தொழிலுக்கான ஜி.எஸ்.டி. உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் சவுராஷ்டிரா வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா வர்த்தக சங்கம் நடத்திய வணிகர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் சேவைத்தொழிலுக்கான ஜி.எஸ்.டி. உச்சவரம்பை அதிரிக்கப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

வணிகவரி இணை கமிஷனர் கீதாபாரதி பங்கேற்றார். கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர் தினேஷ், முன்னாள் தலைவர் மோகன்ராம், துணைத்தலைவர் குபேந்திரன், பொதுச்செயலாளர் குமரேஷ்பாபு, பொருளாளர் ராம்லட்சுமணன், இணைச்செயலாளர்கள் சீனிவாசன், சூர்யபிரகாஷ் தெரிவித்ததாவது: சேவைத்தொழிலுக்கான ஜி.எஸ்.டி. உச்சவரம்பை ரூ.40 லட்சமாகவும் வியாபாரத்திற்கு ரூ.80 லட்சமாக உயர்த்த வேண்டும். . எங்களது உள்ளீட்டு வரி எடுப்பதற்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கும் காலக்கெடு ஒன்றரை ஆண்டாக குறைக்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தான் ஜி.எஸ்.டி., (நோட்டிபிகேஷன்) திருத்தம் செய்ய வேண்டும். லாரி வாடகை ரசீது போன்ற உள்ளீட்டு வரி எடுத்த ஆவணங்களை 8 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். வியாபாரிகளின் விளக்கங்களை கூறுவதற்கென தனிப்பகுதி ஜி.எஸ்.டி., ரிட்டனில் உருவாக்க வேண்டும்.

கட்டுமானத்துறைக்கான வணிகவரி 18 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மாற்றம் குறித்து சுற்றறிக்கை, சட்டங்கள் குறித்த விவரங்களை எல்லா சங்கங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.

Advertisement