வாரசந்தை வளாகத்தில் அடிப்படை வசதி; தியாகதுருகம் மக்கள், வியாபாரிகள் கோரிக்கை
தியாகதுருகம் : தியாகதுருகம் வார சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் பஸ் நிலையத்தையொட்டி, சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது. கடந்த 100 ஆண்டுகளாக நடக்கும் இச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி கால்நடை விற்பனை அதிக அளவில் நடக்கும்.
சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதனை வாங்குவதற்கு வெளியூரில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவதால் போட்டி காரணமாக கால்நடைகளுக்கு கூடுதல் விலை கிடைத்து விவசாயிகள் லாபம் அடைகின்றனர்.
இதன் காரணமாக வார சந்தை நடக்கும் தினத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வியாபார பரிவர்த்தனை இங்கு நடக்கும்.
இங்கு கடை வைப்பவர்கள் கால்நடைகளை விற்பனை செய்பவரிடம் இருந்து வரி வசூலிப்பதன் மூலம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த வார சந்தையில் இதுவரை கடைகள் அனைத்தும் திறந்த வெளியிலேயே நடத்தப்படுகிறது. வியாபாரிகள் அனைவரும் தார்பாயை கட்டி வெயில், மழையில் இருந்து பாதுகாத்து கடை நடத்த வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
இங்கு தனித்தனியே கடைகள் கட்டித் தர வேண்டும் என வியாபாரிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதேபோல் வார சந்தை நடக்கும் இடத்தில் போதிய விளக்கு வெளிச்சமின்றி இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை. விரைவில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் வார சந்தை வளாகத்தில் கடைகளை கட்டி பாதுகாப்பாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யவும் அப்பகுதியில் போதிய மின் விளக்குகள் அமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட செங்கல்பட்டு - தி.மலை இணைப்பு சாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா: அரசு விளக்கம் தர உத்தரவு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
-
'ஸ்மார்ட்' மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
-
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தால் முதலீட்டாளர்கள் அச்சம்
-
50 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 உயர்வு
-
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி