சாம்சங் தொழிலாளர் போராட்டத்தால் முதலீட்டாளர்கள் அச்சம்

சென்னை:சாம்சங் நிறுவன பணியாளர்களில், ஒரு பிரிவினரின் போராட்ட விவகாரத்தில், தமிழக அரசு துரிதகதியில் நிரந்தர தீர்வு காணாமல் அமைதி காப்பது, தொழில் துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளார் மாநாடு



தமிழகத்தை, 2030க்குள் ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக முன்னேற்ற, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக, தொழில் முதலீடுகளை ஈர்க்க, 2024 ஜனவரியில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில் துறை குழு மேற்கொண்ட பயணங்கள் வாயிலாக, 18,500 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்களின் ஒரு பிரிவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 இறுதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்



பின், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில், சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி, சாம்சங் நிறுவன பணியாளர்களின் ஒரு பிரிவினர், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக, சங்கம் மற்றும் நிர்வாகத்திடம், தொழிலாளர் நலத்துறை இதுவரை நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மார்ச் முதல் வாரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, சி.ஐ.டி.யு., சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாம்சங் ஷோரூம் முன் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது, தொழில் துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மவுனம் காக்கிறது



இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில் துறைமுக வசதி, அனைத்து நகரங்களுடன் இணைக்கும் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி நன்கு உள்ளதால், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பன்னாட்டு நிறுவனமான சாம்சங் ஆலையில், பணியாளர்களில் ஒரு பிரிவினர் மற்றும் நிர்வாகம் இடையில் மோதல் போக்கு தொடர்கிறது. இதற்கு அரசு துரிகதியில் தீர்வு காணாமல், மவுனம் காக்கிறது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சியின் சங்கமே போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசு அமைதி காப்பதே உண்மை.

சாம்சங் பணியாளர்களுக்கு ஆதரவாக, அனைத்து தொழில் பூங்காக்களில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் சி.ஐ.டி.யு., சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவர் என, அச்சங்கத்தினர் கூறுகின்றனர். ஒருநாள் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்.

விரைவில் சமரசம்



சாம்சங் விவகாரத்தை அரசு சரியாகக் கையாளாமல் இருப்பது, இதுபோன்ற பிரச்னை தங்களின் ஆலையிலும் ஏற்படுமோ என்ற அச்சம், மற்ற தொழிற்சாலைகளுக்கு எழுந்துள்ளது.

எனவே, அரசு விரைந்து செயல்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், வரும் காலத்தில் இதுபோன்று ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பணியாளர்களின் நலனும் முக்கியம்; அதேசமயம், பல நுாறு பேருக்கு வேலை வழங்கும் ஆலை நிர்வாகத்தின் கருத்தையும் மதிக்க வேண்டும். சாம்சங் விவகாரத்தில் நடப்பது சிறு பிரச்னை தான்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக்கூடாது என்பதற்காக, அரசு பொறுமை காக்கிறது. இரு தரப்பு பேச்சில் விரைவில் சமரசம் ஏற்படும்.

நல்ல கட்டமைப்பு, திறன்மிக்க பணியாளர்கள் போன்றவற்றால், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

13 பேர் 'சஸ்பெண்ட்'



சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாகக் கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதிக்க கேட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை, 'சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் உள்ளே, 16வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தொழிற்சாலைக்கு உள்ளே சென்று, உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சில் ஈடுபட்டனர்; பின் வெளியேறி, வழக்கமான இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேலும், 13 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்ததாக, சாம்சங் நிர்வாகம் கடிதம் அளித்தது; தொழிற்சாலையில் இருந்து அந்த 13 பேர் வெளியேறவும் உத்தரவிட்டது.

கடிதத்தை வாங்க மறுத்து, தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறினர். நிர்வாகத்தினரின் சட்டவிரோதப் போக்கை கண்டித்து, காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் பந்தல் அமைத்து, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சி.ஐ.டி.யு., காஞ்சிபுரம் மாவட்ட செயலர் முத்துகுமார் கூறினார்.

Advertisement