கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா: அரசு விளக்கம் தர உத்தரவு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

1

சென்னை:'ஜாதி பெயர்களை வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'ஜாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட சங்கத்தை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா' என, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அத்துடன், ஜாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் நுழை வாயிலில், ஜாதி பெயருடன் பெயர் பலகை உள்ளது. அங்கு செல்லும் ஆசிரியர், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என, முதல் பாடமாக நடத்துவது பெரிய முரணாக உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இது போன்ற வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, குறிப்பிட்ட ஜாதிகளில் பெயரிடப்பட்ட சங்கங்களை அடையாளம் காணவும், அந்த சங்கங்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் நலனுக்கு மட்டும் சேவை செய்வதை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், அந்த சங்கங்களின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த நவம்பரில் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, 'எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை. விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சில அரசு பள்ளிகளில் கூட, ஜாதி பெயர்கள் இடம் பெற்றுள்ளன' என்றார்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், 'பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர், பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும்' என்றார். இதையடுத்து, 'நன்கொடை வழங்கி இருந்தாலும், ஜாதி பெயர் சேர்க்கப்படக்கூடாது.

ஜாதி என்பது மதத்தை கடந்தது. பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட ஜாதி பெயர்களை, இன்னும் சுமக்கின்றன.

ஜாதி பெயர்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது' என தெரிவித்த நீதிபதி, பள்ளி, கல்லுாரிகளின் பெயரில் உள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என, தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வரும் 25ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement