ஐகோர்ட் உத்தரவு மீறல்: 'ஆபீஸ் ஒர்க்' செய்யும் கைதிகள்

4

மதுரை: தமிழக சிறைகளில், ஐகோர்ட் உத்தரவை மீறி அலுவலக பணிகளில் தண்டனை கைதிகளை பயன்படுத்துவது தொடர்கிறது. இதனால் நிர்வாக ரீதியான முன்னெச்சரிக்கை உத்தரவுகள், ரகசியங்கள் வெளியே கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. நிர்வாக பணிகளை அமைச்சு பணியாளர்கள் கவனிக்கின்றனர். காவலர்கள், கைதிகளின் அனைத்து விபரங்கள், நிர்வாக ரீதியாக கடித போக்குவரத்து அனைத்தையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.


இந்நிலையில், கடந்த மாதம் புழல் சிறை தண்டனை கைதி கோதண்டம், 30 நாள் பரோல் கேட்டு ஐகோர்ட்டை நாடினார். 'சிறை அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலக பணிகளை செய்து வந்ததோடு, எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் இருப்பதால், தனக்கு பரோல் அனுமதிக்க வேண்டும்' என்றார்.


அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், 'தண்டனை கைதிகளுக்கென சிறை நிர்வாகத்தால் குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்படும் போது, அரசு ஊழியர்கள் ஊதியம் வாங்கிக்கொண்டு அலுவல் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்துவது எப்படி நியாயமாகும்' என, கேட்டனர்.


தொடர்ந்து, கைதிகளை அலுவல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என, உத்தரவிட்டனர். இதுகுறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். ஆனால், இந்த உத்தரவையும், எச்சரிக்கையையும் சிறைத்துறை கண்டுக்கொள்ளவே இல்லை.


பெரும்பாலான மத்திய சிறைகளில், இன்னும் அலுவல் பணிகளிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்துவது தொடர்கிறது.


சிறை காவலர்கள் கூறியதாவது: நிர்வாக ரீதியாகவும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்தும்போது அலுவல் விஷயங்கள் குறித்த ரகசியங்கள் பிற கைதிகளுக்கு தெரியவரும். உதாரணமாக சில கைதிகளை குறிப்பிட்டு, அவர்களை கண்காணிக்குமாறு ரகசிய தகவல் வரும்பட்சத்தில், அது சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தெரிந்துவிடும். அவர்கள் சுதாரிப்பர்.


சிறைக்குள் அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க அலுவல் பணிகளிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்தக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை, டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement