மோசடி மையங்களில் மீட்கப்பட்ட 1,000 சீனர்கள் நாடு திரும்பினர்

பாங்காக்,மியான்மரில், 'ஆன்லைன்' மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட சீனர்கள், தனி விமானத்தில் சீனா அழைத்துச் செல்லப்பட்டனர்.

சர்வதேச ஆன்லைன் மோசடியின் முக்கிய இடமாக, நம் அண்டை நாடான மியான்மர் உள்ளது. சில பயங்கரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த மையங்கள் இயங்குகின்றன.

மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகளில் செயல்படும் ஆன்லைன் மோசடி மையங்களுக்கு, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்களை, போலி வாக்குறுதி அளித்து, வேலைக்கு அழைத்துச் சென்று அடிமைகளாக நடத்துகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமானோர், இதுபோன்று அழைத்துச் செல்லப்பட்டாலும், சீனர்கள் மட்டும் 45,000 பேர் வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஆன்லைன் மோசடி கும்பலை முடக்குவதற்காக சீனா, தாய்லாந்து, மியான்மர் நாடுகள் இணைந்து நடவடிக்கையை துரிதப்படுத்தின.

அதன்படி, எல்லையில் இன்டர்நெட், மின்சார வசதிகளை சமீபத்தில் தாய்லாந்து துண்டித்தது. கடந்த வாரம் 20 நாடுகளைச் சேர்ந்த 260 பேர், தாய்லாந்து உதவியுடன் மியான்மரில் இருந்து மீட்கப்பட்டனர்.

மேலும், 10,000 பேர் வரை மீட்கப்படலாம் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மியான்மரின் மியவாட்டியில் நேற்று 50 பேர் மீட்கப்பட்டு, தாய்லாந்தின் மேவே சோட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

தற்போது வரை, மியான்மரில் மீட்கப்பட்ட 1,041 சீனர்கள், தாய்லாந்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனி விமானங்களில் சீனாவுக்கு அனுப்பும் பணி துவங்கியது. தாய்லாந்தின் மேவே சோட்டில் இருந்து, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிங்ஹாங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனி விமானங்களை தங்கள் நாட்டில் இருந்து இயக்க, சீனாவுக்கு தாய்லாந்து அனுமதி அளித்துள்ளது.

Advertisement