புறநகர் பகுதிகளை எட்டி கூட பார்ப்பதில்லை; என்றைக்குத்தான் தீர்வு

மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகளில் புறநகர் பகுதிகள் புதியதாக உருவாகி கொண்டே உள்ளது.

பல புறநகர் பகுதிகள் உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

முக்கியமான குடிநீர், ரோடு, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.

புறநகர் பகுதி குடியிருப்போர் நல சங்கம் மூலமாகவும் தனியாகவும் பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி, உள்ளாட்சி ஊராட்சி அலுவலகங்களுக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி ரோடுகளில் நடக்க முடியாமலும், வாறுகாலில் கழிவுநீர் தேங்கியும் சிரமப்படுகின்றனர்.

வெயில் காலம் ஆனால் கடுமையான குடிநீர் பஞ்சம் வாட்டி வதைக்கிறது.

புறநகர் பகுதி மக்கள் முறையாக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று தான் வீடுகள் கட்டியுள்ளனர்.

இவற்றிற்கான வரியையும் ஆண்டுதோறும் தவறாமல் கட்டுகின்றனர்.

ஆனால் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் புறநகர் பகுதிகளுக்கு வசதிகள் செய்து தருவதில் மெத்தனம் காட்டுகின்றது.

நகராட்சிகள் தங்களுக்கான வார்டுகளுக்கு மட்டும் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. புறநகர் பகுதிகளை ஒதுக்கி விடுகிறது. இதே போன்று தான் ஊராட்சிகளிலும் உள்ளது.

புறநகர் பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் அனைத்தும் காட்சி பொருளாகவே உள்ளன. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வரவில்லை. தெருக்களில் குப்பையை வாங்க வருவது இல்லை.

இதனால் காலியாக உள்ள இடங்களில் குப்பையை கொட்டி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் புறநகர் பகுதி மக்கள் ஆண்டு கணக்கில் எந்தவித வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டே உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வரும் போது அந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்ற வாக்குறுதிகளை மட்டும் தவறாமல் வழங்குகின்றனர்.

தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பதவி காலம் முடியும் வரை, புறநகர் பகுதிகளை எட்டி கூட பார்ப்பதில்லை. என்றைக்குத்தான் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement