பராமரிப்பின்றி கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளம்

இருளஞ்சேரி:பேரம்பாக்கம் அடுத்த, இருளஞ்சேரியில், 1,500 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட அன்னை தாயினும் நல்லாள் காமாட்சி சமேத கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் எதிரே கோவிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை கொண்டு தான், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது.

நாளடைவில் இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்ததால், குளத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு குளத்து நீரை பயன்படுத்துவதில்லை.

கோவில் குளத்தை சீரமைப்பது குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கோவில் குளம் என்றும் வற்றாமல் நீர் நிறைந்து இருக்கும் என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.

எனவே, கலிங்க நாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருளஞ்சேரி பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement